ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலகத்தின் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லங்களிலிருந்தபடியே, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, அஞ்சலக ஊழியர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை செய்துள்ளது.
நேரடியாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் “இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்கள் இல்லங்களிலிருந்தபடியே, அஞ்சலக ஊழியர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார செயலியைப் பயன்படுத்தி, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான சேவை கட்டணமாக ரூ.70/- மட்டும் அஞ்சலக ஊழியரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தாங்கள் வசித்துவரும் பகுதியைச் சேர்ந்த அஞ்சலக ஊழியரிடம் ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய கொடுப்பனவு ஆணை எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதியைச் சேர்ந்த அஞ்சலக ஊழியரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



