அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் மியாமி நோக்கி புறப்பட இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒடு பாதையில் செல்லும் போது லேண்டிங் கியர் (landing gear) செயலிழந்து, டயர் திடீரென தீப்பற்றியுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் புகை மூட்டம் ஏற்பட்டதால், விமானம் புறப்படாமல் உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதன்பின் ஏற்பட்ட அவசரநிலையில், விமானத்தில் இருந்த 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அனைவரும் அவசரகால ஸ்லைடுகள் மூலமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகின்றது. பயணிகள் பீதியுடன் வெளியேறும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீவிபத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது எனவும், தற்போது விமான நிலையம் வழக்கமான செயல்பாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலின் காரணமாக மாலை 2 மணி முதல் 3 மணி வரை விமான நிலையம் தற்காலிகமாக தரை நிறுத்தப்பட்டு, மொத்தம் 87 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், “அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read more: வயிற்றுப் புழுக்கள் ஆசனவாய் வரை நெளியுதா?. இதை டிரை பண்ணுங்க!. எளிய வீட்டு வைத்திய முறை!.