தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்..
இந்த மாநாட்டில் பேசிய கனிமொழி “ டபுள் எஞ்சின் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அது வேலை செய்யாத எஞ்சின்.. நாட்டில் டபுள் எஞ்சின் ஆளும் மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது.. திராவிட மாடல் எஞ்சின் முன் டபுள் எஞ்சின் எல்லாம் காலாவதியான எஞ்சின் தான்.. கொடுத்த வாக்குறுதியை யாரால் காப்பாற்ற முடியும் என்பது பெண்களுக்கு தெரியும்.. தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் மிகவும் புத்திசாலிகள்.. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் தருவதாக சொன்னார்களே தந்தார்களா?
30,000 தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இங்கிருக்கும் ஆளுநருக்கு குடியரசு என்றால் என்ன தெரியாது.. பொறுமையாக சகித்துக் கொண்டு இருக்கிறார் முதல்வர் அவர்கள்.. ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்திற்கு வருகிறார்.. ஆனால் தமிழ்நாடு அரசின் உரையை படிக்கமாட்டார்.. ஏன் வருகிறார்? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசை ஆளுநர் ஒவ்வொரு ஆண்டும் அவமதிக்கிறார்..
அதனால் தான் நமது முதல்வர், இதை ஆளுநர்கள் உரையை படிக்க வேண்டாம் என்று அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்கள்.. ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர்களுக்காக மட்டும் ரூ.700 கோடி செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.. பாஜக அல்லாத மாநிலங்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று இந்த ஆளுநர்களை ஒன்றிய அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது..
பிரதமர் பொதுவாக வெளிநாடுகளில் தான் பயணம் செய்வார்.. இந்த தேர்தல் காலத்தில் அவரின் விமானம் இந்தியாவுக்கு திரும்பும்.. எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அங்கு செல்வார்.. நமது பிரதமர் ஒரு டூரிஸ்ட் பிரதமர்.. அவர் சமீபத்தில் தமிழகம் வந்த போது திமுக பெயரை சொன்னார்.. ஆனால் 45 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி அதிமுக பெயரை சொல்லவே இல்லை.. கட்சியின் பெயரையே நிராகரிக்கும் இடத்தில் நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்.. உங்கள் ஆளாக்கிய கட்சிக்கு துரோகம் செய்கிறீர்கள் பழனிசாமி அவர்களே.. மக்கள் ஒருபோதும் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்..
தமிழ்நாட்டின் திட்டங்களை நிறுத்திவிட்டு, தேர்தலுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரோடு இவர்கள் கூட்டணி வைத்திருக்கின்றனர்.. இவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை காட்டுவோம்..” என்று தெரிவித்தார்..



