சித்தியின் கொடுமையால், 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா பிரிந்து சென்ற நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமர்நாத், மாற்றுத்திறனாளி பெண்ணான உஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இதனால் பிரதிஷா தனது பெரியம்மாவுடனும், நந்தினி அமர்நாத்துடனும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் நந்தினியை வீட்டு வேலை செய்யுமாறு உஷா தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட நந்தினி, இது குறித்து தனது தந்தை அமர்நாத்திடம் பலமுறை முறையிட்டுள்ளார்.
இதனை அறிந்தும் அமர்நாத் உஷாவை எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதனிடையே ஒரு நாள் துணி துவைக்காவிட்டாலும் “துணி துவைக்கவில்லை. சித்தி என்ன சொல்ல போகிறாரோ” என தோழிகளிடம் நந்தினி புலம்பி வந்துள்ளார். தாய் தன்னுடன் இல்லாத நிலையில், தந்தையும் சித்தியின் கொடுமைகளை பார்த்துக் கொண்டிருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நந்தினி இரவு வீட்டில் தூக்கிட்டுள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் மாணவியை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், நந்தினியின் உறவினர் நிர்மல் குமார் என்பவர் இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக உஷா மற்றும் அமர்நாத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.