பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது, பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் பேசினர்.
மேலும், பாமகவில் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமக தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28-ம் தேதியுடன் அன்புமணிக்கு முடிவடைந்துவிட்டது. இதையடுத்து பாமக சட்ட விதிகளின்படி தலைவராக ராமதாஸ் மே 29-ம் தேவியே பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாமக முறைப்படி கடிதம் அனுப்பி உள்ளது. தலைமை நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழுக் கூட்டத்தின் தீர்மான நகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் திமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகத் தெரிகிறது. திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் அன்புமணியோ அதிமுக – பாஜக கூட்டணியை விரும்புவது தெரிகிறது.
இந்த நிலையில் தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இயங்கும் பாமக தலைமை அலுவலகமான திலக் தெரு முகவரி இடம்பெற்றுள்ளது. பாமகவின் தலைமை அலுவலகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தான் இயங்குகிறது என்று ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணி அலுவலகத்தின் முகவரியை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அன்புமணி தலைமையில் இயங்கும் பாஜகவை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த தகவல் ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.