தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை பாஜக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபுறம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு பாஜக உள்ளது.
இதற்கிடையே வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவின் முன்னணி தலைவர்கள் குறிப்பாக அண்ணாமலை களமிறங்கலாம் என்று கூறப்பட்டது. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒதுக்கப்படும் இடங்களை பொறுத்து பாஜக பிரபலங்கள் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலைக்கு பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த தேர்தல்களில் அண்ணாமலை வேட்பாளராக களம் இறங்கிய தொகுதியில் தோல்வியையே தழுவினார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் முதல் முதலாக களமிறங்கினார். ஐபிஎஸ் அதிகாரி என்ற பின்னணியுடன் அரசியல் களத்தில் நுழைந்த இவர், அப்போது பெரும் கவனத்தை ஈர்த்தார். இருந்தாலும், அந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் தோல்வியடைந்தார்.
இதையடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரசியல்வாதியாக களம் இறங்கி அண்ணாமலை சந்தித்த இரண்டு தேர்தல்களும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
Read more: ChatGPT ஆல் ஆபத்து.. ப்ளீஸ்.. இந்த விஷயத்தை செய்யாதீங்க..!! OpenAI CEO சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை