தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, விரைவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலகினார். இதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வானார். மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஒரு நாளுக்குப் பிறகு அண்ணாமலை கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேலும் அவர் மத்திய இணை அமைச்சர் ஆகலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையொட்டி அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பது நாளடைவில் தெரிய வந்தது. அதேசமயம் அண்ணாமலையை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
2024 தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமலே போட்டியிட்டு, தமிழகத்தில் 3% வாக்குகளை 11% ஆக உயர்த்தியது, அண்ணாமலையின் கடின உழைப்பால் தான் என்று கட்சி நெருக்கமானோர் பாராட்டுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல சந்தர்ப்பங்களில், “அண்ணாமலை, மாநில அரசியலில் மட்டும் அல்ல, தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகிப்பார்” என பாராட்டி இருந்தார்.
தற்போது அண்ணாமலை எந்த ஊடகங்களுக்கும் பேட்டி தரவில்லை. அவர், “ஆகஸ்ட் மாதத்திலிருந்து பேசுவேன்” என சொல்லியுள்ளார். அதுவரை பாஜக சார்ந்த கூட்டங்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே அவருக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி முதல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் தேசிய பொதுச் செயலாளராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: இன்ஸ்டா காதலனை வீட்டுக்கு அழைத்த பிளஸ்-2 மாணவி.. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!