கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஹூக்ளியில் வெள்ளிக்கிழமை இரவு தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், தாரகேஸ்வரில் உள்ள ஒரு ரயில்வே கொட்டகையில் கொசு வலையின் கீழ் ஒரு கட்டிலில் தனது பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக ஹூக்ளி கிராமப்புற காவல்துறையின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்போது, அங்கு சென்ற மர்மநபர்கள், கொசு வலையை அறுத்து சிறுமியை தூக்கிச்சென்றதாக தெரிகிறது. மறுநாள் மதியம், தாரகேஸ்வர் ரயில்வே ஹை டிரைன் அருகே குழந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி கூறுகையில், கிழிந்த கொசுவலையைக் காட்டி அதிகாலை 4 மணியளவில், யாரோ அவளை அழைத்துச் சென்றனர். எப்போது அழைத்துச் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யார் அவளை அழைத்துச் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கொசுவலையை வெட்டி அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுமி நிர்வாணமாக கிடந்தாள் என்று கூறியுள்ளார்.
அதாவது, நாங்கள் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நிர்வாகத்தால் எங்களது வீடு இடிக்கப்பட்டதால் நாங்கள் தெருக்களில் வசிக்கிறோம். நாங்கள் எங்கே போவது? எங்களுக்கு வீடு இல்லை” என்று பாட்டி கண்ணீருடன் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவர் தாரகேஸ்வர் கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து தடயவியல் ஆதாரங்களை காவல்துறை குழுக்கள் சேகரித்து, அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆராயத் தொடங்கியுள்ளன. “நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளி விரைவில் அடையாளம் காணப்படுவார்” என்று ஹூக்ளி கிராமப்புற காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



