1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 5000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்புறங்களில் 10,000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றது. 2025-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக்கேற்ப மேலும் 642 துணை சுகாதார நிலையங்கள், கிராமம் மற்றும் நகர்புறத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது கிராமப்புறங்களில் 8713 துணை சுகாதார நிலையங்களும், நகர்புறங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட 2368 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது.
கிராமப்புற சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். கிராம சுகாதார செவிலியர்கள் – தாய் சேய் நலப் பணி, தடுப்பூசி பணி, குடும்ப நல திட்டப் பணிகள், கருத்தடையை ஊக்குவித்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், வளர் இனம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்குதல், இரத்தசோகை தடுப்பு மாத்திரை வழங்தல், பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கிராமபுறங்களில் சிறுசிறு நோய்களான வயிற்றுப்போக்கு, சுவாச தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளித்தல், குடும்ப பதிவேடு பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.
கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 25.07.2023 முன்னர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 1231 மாணவர்களுக்கு வெளிப்படையான முறையில் மாவட்டங்களில் இருந்த காலிப்பணியிடங்களை தேர்வு செய்யும் வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 2417 காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



