சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய், பூனை வளர்ப்பவர்கள் அனைவரும் கட்டாயம் லைசன்ஸ் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் நவம்பர் 24ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
மேயர் ப்ரியா தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, “லைசன்ஸ் பெறாதவர்கள் மீது அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தி, ரூ.5,000 அபராதம் விதிக்க உள்ளனர். மேலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது கழுத்துப்பட்டை (Leash) கட்டாயம் அணியச் செய்ய வேண்டும். இதை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதத்தை அந்தந்த வார்டின் சுகாதார இன்ஸ்பெக்டர் வசூலிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாய்களை வெளியில் அழைத்துச் செல்லும் போது அசுத்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது. அப்படி நடந்தால் அதை சுத்தப்படுத்தும் பொறுப்பு நாய் உரிமையாளருக்கே என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் லைசன்ஸ் பெறலாம்: செல்லப்பிராணி உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் செல்லப்பிராணியின் புகைப்படம் மற்றும் தடுப்பூசி சான்றிதழை பதிவேற்றி, ரூ.50 செலவில் லைசன்ஸ் பெறலாம். தற்போது வரை 9,579 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் இன்னும் லைசன்ஸ் பெறவில்லை என்பதால், நவம்பர் 24க்குள் விண்ணப்பிக்காவிட்டால் அபராதம் தவிர்க்க முடியாது.
Read more: Flash : ஹேப்பி நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?



