முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கத்திலும் 2027-ம் ஆண்டில் உத்தர பிரதேசம், குஜராத், கோவாவிலும், 2028-ம் ஆண்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அந்தமான் – நிகோபர், லட்சத்தீவிலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மேற்கண்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. 28-ம் தேதி இப்பணி தொடங்கியது. இதன் முதல்கட்டமாக, அக்டோபர் 28 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். டிசம்பர் 9-ல் வரைவுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 8 வரை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிசம்பர் 9 முதல் ஜனவரி 31 வரை பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது.
பிஎல்ஓ-க்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐஆர் செயலியில், சம்பந்தப்பட்ட அந்த வாக்காளர் குடிபெயர்ந்ததாக பதிவு செய்துவிடுவார்கள். அப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் டிசம்பர் 9-ம் தேதி முதல் நடைபெறும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதனால் முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
குறிப்பிட்ட முகவரியில் வசிப்பவர்கள், அதே முகவரியில் வாக்காளர் அட்டை பெற்றிருந்தால் கட்டாயம் படிவம் வீடு தேடி வந்து சேரும். பிஎல்ஓ படிவத்தை கொடுக்காமல் இருந்தால், தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் பிரத்யேக செயலியின் டேஷ் போர்டில் பார்க்க முடியும். எதற்காக படிவம் இன்னும் சென்று சேரவில்லை என பிஎல்ஓ-க்களிடம் கேள்வி எழுப்ப முடியும். பிஎல்ஓ-க்கள் படிவத்தை வழங்காமல் இருந்தால், அதற்கான காரணத்தை இறப்பு, குடிபெயர்தல் அல்லது ஆப்சென்ட் என எஸ்ஐஆர் செயலியில் குறிப்பிட வேண்டியது கட்டாயம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், அது ஆதார் அடிப்படையில் ஓடிபி பெற்று செயல்படும் என்பதால், ஆதார் அட்டையிலும், வாக்காளர் அட்டையிலும் பெயர் ஒரே மாதிரி இடம் பெற்றிருப்பது அவசியம். குறிப்பிட்ட முகவரியில் வசிக்காமல் ஆன்லைனில் விண்ணப்பித்தால், தொடர்புடைய பிஎல்ஓ அந்த படிவத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்.



