வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே நீண்ட காலமாக தீர்வு காண முடியாத பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இதனை முற்றுப்புள்ளி வைக்க, ‘வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025’ விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கும், வாடகைக்கு குடியேறுபவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இருதரப்பிற்கும் சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* இனி வீடு வாடகைக்கு விடும் போது, வாடகை ஒப்பந்தத்தை 2 மாதங்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இருந்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
* வாடகை ஒப்பந்தம் ஆதார் அடிப்படையிலான மின்னணு சரிபார்ப்பு முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடும் நடைமுறை இனி செல்லாது.
* வீட்டு உரிமையாளர் 2 மாத வாடகையை மட்டும் முன்பணமாக வசூலிக்க அனுமதி. வணிகக் கட்டிடங்களுக்கு மட்டும் 6 மாத முன்பணம் வசூலிக்கலாம்.
* வாடகைத் தொகையை 12 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும். வாடகை உயர்த்த வேண்டுமெனில் 2 மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும்.
* வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், 30 நாட்களுக்குள் உரிமையாளர் சரி செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டால், வாடகைதாரர்கள் பழுது சரி செய்து அந்த செலவை வாடகை தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.
* வீட்டு உரிமையாளர் விரும்பும் நேரத்தில் வீட்டிற்குள் நுழைய முடியாது. குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் எழுத்துப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும்.
* காரணமில்லாமல் வாடகைதாரரை வீட்டை காலி செய்ய வற்புறுத்த முடியாது. வாடகை செலுத்தாதது, வீடு சேதப்படுத்துதல் போன்ற நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே காலி செய்ய வைக்க முடியும்.
* வாடகை தொடர்பான தகராறுகள் மற்றும் வீடு காலி செய்வது குறித்த வழக்குகள் 2 மாதங்களுக்குள் தீர்வு காண சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
* மாத வாடகை ரூ.50,000-க்கு மேல் இருந்தால் TDS பிடித்தம் கட்டாயம். அதே நேரத்தில், சிறிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கு TDS வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாடகை ஒப்பந்தம் பதிவு செய்வது எப்படி? வாடகைதாரரும், வீட்டு உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தத்தை தயாரித்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்யலாம். ஆதார் அல்லது பான் அட்டை போன்ற ஆவணங்கள் இருந்தால் போதுமானது.
இந்த புதிய சட்டத்தின் மூலம், வாடகைதாரர்களுக்கு குறைந்த முன்பணம், திடீர் வாடகை உயர்வில் இருந்து பாதுகாப்பு மற்றும் சட்ட ஆதாரம் கிடைக்கிறது. வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூலில் எளிமை, சட்டபூர்வ ஆவணம் மற்றும் விரைவான தீர்வு போன்ற பலன்கள் கிடைக்கின்றன. இதனால், இனி வாடகை ஒப்பந்தங்கள் சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாதால், அபராதம் விதிக்கப்படுவதோடு, இருதரப்பிற்கும் சட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: குளிர்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும், உங்கள் சருமம் பளபளன்னு ஜொலிக்கும்!



