பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக நீதி, பாசிசத்திற்கு எதிரான பார்வை, மற்றும் எழுச்சியூட்டும் அரசியல் பேச்சுகள் மூலம் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்திருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம், பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் மீது “குண்டர் சட்டம்” (Goondas Act) படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை தடுப்புக் காவலில் வைக்க முடியும். எந்தவித விசாரணையோ குற்ற நிரூபணமோ இல்லாமலும் 1 வருடம் வரை சிறையில் வைக்க சட்டம் அனுமதிக்கிறது.
குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்ட விதத்தில் முறைகேடு ஏற்பட்டதாக, கைதானவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்ட காலத்திற்கும்,, குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் இடையே உள்ள கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
காவல்துறை சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி. குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, இந்த வழக்கு மாநில சட்ட ஒழுங்கு மற்றும் பொதுநலனுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனால், குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது என்றனர்.
மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்புகளின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (ஆ.6) நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதன் படி 26 பேரில் 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் அறிவித்தது. மீதமுள்ள 9 பேரிடம் தொடர்பான தீர்ப்பு மற்றும் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Read more: இனி வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாமலே Chat செய்யலாம்.. செம அப்டேட் வரப்போகுது ..!!