விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மட்டும் சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகள் மூலமாக சுமார் 2.31 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். விடுமுறை முடிந்து செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் தலைநகர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை வந்தடைவதை உறுதி செய்ய, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக செப். 14 அன்று 2,240 பேருந்துகளும், செப். 15 அன்று 1,325 பேருந்துகளும் என கிளாம்பாக்கம் (KCBT) முனையத்திற்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு 160 பேருந்துகளும், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாக கோயம்பேடு பணிமனைக்கு 370 பேருந்துகளும் என மொத்தம் 4,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகையைக் கண்காணிக்கவும், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கிளாம்பாக்கத்தில் பொது மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Nodal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம் வந்தடையும் பயணிகள் நகரின் உட்பகுதிகளுக்கு தடையின்றி செல்ல ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் 550 கூடுதல் பயண நடைகள் (Trips) இயக்கப்படுகின்றன. செப். 14 மாலை முதல் நள்ளிரவு வரை 400 நடைகளும், செப். 15 அதிகாலை முதல் 150 நடைகளும் தாம்பரம், கிண்டி, கோயம்பேடு, பிராட்வே, வேளச்சேரி, ஆவடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்படும். இதேபோல், ரயில் மூலம் ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்தும் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Read More : சென்னையில் எத்தனை விநாயகர் சிலைகள் வைத்து வழிபடலாம்..? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



