21 ஆம் நூற்றாண்டின் மிகவும் அசாதாரண வானியல் நிகழ்வுகளில் ஒன்றான மகா வட ஆப்பிரிக்க கிரகணத்தை உலகம் காண உள்ளது, இது ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும் முழு சூரிய கிரகணமாகும். இது சாதாரண கிரகணம் அல்ல; 1991 மற்றும் 2114 க்கு இடையில் நிலத்திலிருந்து தெரியும் மிக நீண்ட முழு சூரிய கிரகணமாக இது இருக்கும்.
பெரும்பாலான முழு சூரிய கிரகணங்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும், ஆனால் இது வழக்கத்தைவிட கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இது வான் பார்வையாளர்களுக்கும் வானியலாளர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பை உருவாக்குகிறது. “முழுக் கிரகண பாதை” எனப்படும் 258 கிலோமீட்டர் அகலமுள்ள குறுகிய பகுதியில் உள்ளவர்கள், இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காண முடியும்.
Space.com இன் அறிக்கையின்படி, கிரகணம் அட்லாண்டிக் பெருங்கடலில் அதன் பயணத்தைத் தொடங்கி, பல நாடுகளைக் கடந்து கிழக்கு நோக்கி நகரும். முழு கிரகணம் ஸ்பெயின், மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் துனிசியாவின் சில பகுதிகள், லிபியா மற்றும் மத்திய எகிப்தின் சில பகுதிகள், சூடான், ஏமன், சவுதி அரேபியா மற்றும் சோமாலியாவின் சில பகுதிகளில் தெரியும். இது முடிவில் இந்தியப் பெருங்கடலை கடந்துசென்று சாகோஸ் தீவுக்கூட்டம் அருகே வெளியேறும். இந்த கிரகணத்தை காண திட்டமிடுபவர்களுக்காக, ஆகஸ்ட் மாதத்தில் பொதுவாகத் தெளிவான வானிலையைக் கொண்ட லிபியா மற்றும் எகிப்து போன்ற பகுதிகள் சிறந்த இடங்களாக இருக்கின்றன.
இந்தியாவில் கிரகணம் தெரியுமா? இந்தியா முழு கிரகணத்தின் பாதையில் வராது, இருப்பினும், பல்வேறு இந்திய நகரங்களில் இருந்து பகுதி சூரிய கிரகணம் தெரியும், இதனால் பார்வையாளர்கள் நிகழ்வின் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பார்க்கலாம். பகுதி கிரகணம் இந்திய நேரப்படி மாலை 4:30 மணியளவில் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்ளூர் வளிமண்டலம் மற்றும் வானிலை நிலையைப் பொறுத்து இருக்கும்.
2027ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழும் கிரகணம் இயற்கையின் மகத்துவத்தைக் காண வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது. நீங்கள் சூரிய கிரகணத்தின் முழுமையான பாதையில் இருந்தாலும் சரி அல்லது இந்தியாவில் இருந்து ஒரு பகுதியை பார்த்தாலும் சரி, இந்த வான நிகழ்வைத் தவறவிடக்கூடாது.
Readmore: கோமா நிலைக்குச் சென்ற பிறகு உடலில் என்ன நடக்கும்?. ஒருவர் இந்த நிலைக்கு எப்படிச் செல்கிறார்?.