திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித்தின் வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது அஜித் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.
2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று நிகிதா மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகி உள்ளது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியதும் தெரியவந்துள்ளது. நிகிதா குடும்பம் ரூ.16 லட்சம் வரை மோசடி செய்து, தலைமறைவானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக நிகிதா மோசடி செய்தார் என்று மதுரையை சேர்ந்த ராஜாங்கம் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் தொடர்புடையவர்களை தெரியும் என்று கூறி ஏமாற்றினார்.. மதுரை, ராமநாதபுரம், சென்னை என பல இடங்களில் பல லட்சங்களை நிகிதா தரப்பினர் மோசடி செய்தனர். நிதிதாவின் குடும்பத்தினர் எங்களை திட்டமிட்டு ஏமாற்றினர். காவல்துறையில் புகாரளித்தும் விசாரிக்கவில்லை.. ஏழ்மைக்குடும்பம் என்பதால் வழக்கு தொடரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனது வீட்டை, தனியார் கல்லூரியில் நிர்வாக மேலாளரான பாசிலுக்கு நிகிதா விற்பதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளதாக திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2010ம் ஆண்டு செக்கானூரணியை சேர்ந்த செல்வம் என்பவரிடம், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
நிகிதா ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால், இவரது தற்போதைய புகாரின் உண்மைத்தன்மையை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில் நிகிதா தனது தாயுடன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு நிகிதா தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஐகோர்ட் கிளை வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கூறுகையில், ‘‘புகார்தாரரான நிகிதா ஒரு மூதாட்டியுடன் கோயிலுக்கு வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக அவரால் நடந்து செல்ல முடியாது என்றும், அவருக்கு வீல் சேர் என்றும் அஜித்குமாரிடம் கூறியுள்ளார். வீல் சேர் கொண்டு வர வேண்டுமென்றால் ரூ.500 தர வேண்டுமென அஜித்குமார் கூறியதாகவும், ஆனால், தன்னால் 100 ரூபாய் மட்டுமே தர முடியும் என்றும் கூறி நிகிதா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் திட்டமிட்டு வேண்டுமென்றே அஜித்குமார் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்’’ என்றார்.
Read more: நோட்..! 10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்பு அறிமுகம்…!