மகளிர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் முன்னேறின. இதனையடுத்து நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியானது மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா – ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் மந்தனா 45 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது.
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் 58 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் இந்தியாவின் தீப்தி சர்மா. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகளிர் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ. சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024 டி20 உலக கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



