குறைவான எடையுடன் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பைத் தடுக்க பிசிஜி தடுப்பூசி அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1000 குழந்தைகளுக்கு 24.9 என்ற அளவில் உள்ளது. இது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள விகிதத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். பச்சிளங்குழந்தைகளின் இறப்பிற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக குறை மாதத்தில் பிறப்பது அதாவது 37 வாரங்கள் முடிவடைவதற்குள் பிறக்கும் குழந்தைகள், இரண்டாவதாக பாக்டீரியா கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்றுக் காரணமாக இறப்பது, மூன்றாவதாக பிறக்கும் போது மூச்சு விடாத சூழல் காரணமாக குழந்தையின் மூளையில் ஏற்படும் பாதிப்புக் காரணமாக இறப்பது ஆகும்.
குறிப்பாக குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருப்பதால், அவர்களுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. எனவே, பச்சிளங்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பதற்கு பிசிஜி தடுப்பூசி அவசியம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தடுப்பூசி காசநோய் வராமல் தடுப்பதற்காக செலுத்தப்படுகிறது. ஆயினும், குறைவான எடை கொண்ட குழந்தைகள் மற்றும் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ ரீதியிலான பிரச்சைனகள் இருப்பதால், குழந்தைகள் பிறந்த உடன் பிசிஜி தடுப்பூசி உடனடியாக செலுத்தப்படுவதில்லை.
புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், 5,420 பச்சிளங்குழந்தைகள் பங்கேற்றன. இதில் பிசிஜி தடுப்பூசி (டேனிஷ் வகை) மற்றும் போலியோ சொட்டு மருந்து ஆகியவற்றை குழந்தை பிறந்த 48 மணி நேரத்தில் கொடுக்கும் போது எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் எடை விகிதம் குறைக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.