இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஆபாச உள்ளடக்கங்கள் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் போலியான ஆப்ஸ் மூலம், பயனர்களின் ஸ்மார்ட்போன்களை முடக்கி நிதித் திருட்டு நடத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ (I4C) எச்சரித்துள்ளது.
அதாவது, Night Play, Reloop, Kyss, Vimo, Rivo, Nexo, Vixa போன்ற ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் பாதுகாப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் பயனர்களைக் கவர்ந்து, கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே உள்ள பாதுகாப்பற்ற இணையதளங்கள் (குறிப்பாக .live டொமைன்கள்) வழியே APK கோப்புகளாக இவை பதிவிறக்கம் செய்ய வைக்கப்படுகின்றன.
இந்த ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தவுடன், போனின் ‘Accessibility’ அனுமதியைப் பெற்று, ஹேக்கர்கள் உங்கள் போனை தொலைவிலிருந்தே கட்டுப்படுத்தத் தொடங்குகின்றனர். பின்னணியில் இயங்கும் இந்த வைரஸ் மென்பொருட்கள், பயனருக்கு தெரியாமலேயே UPI மற்றும் வங்கி மூலமாகப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்துவிடும் அபாயம் உள்ளது.
பாதுகாப்பாக இருக்க அரசின் வழிகாட்டுதல்கள்:
கூகுள் பிளே ஸ்டோரை தவிர்த்து, விளம்பரங்கள் அல்லது தெரியாத இணையதள லிங்க்கள் மூலம் எந்த ஒரு APK ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள்.
தெரியாத ஆப்ஸ்களுக்கு ‘Accessibility’ அனுமதி அளிக்க வேண்டாம்.
போனில் Google Play Protect அம்சத்தை எப்போதும் ஆன் செய்து வையுங்கள்.
போனின் மென்பொருள் (Android updates) மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து புதுப்பிக்கவும்.
பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Safe Mode: வழக்கமான முறையில் ஆப்பை நீக்க முடியவில்லை எனில், போனை ‘Safe Mode’-ல் ரீஸ்டார்ட் செய்து, Settings > Apps சென்று சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய ஆப்பை நீக்கவும் (Uninstall).
Factory Reset: அப்படியும் ஆப் நீங்கவில்லை என்றால், முக்கியத் தரவுகளை பேக்அப் செய்துவிட்டு போனை ‘Factory Reset’ செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
புகார் அளிக்க: சைபர் மோசடி நடந்தாலோ அல்லது போலி ஆப்ஸ் குறித்து தெரியவந்தாலோ 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது National Cybercrime Reporting Portal இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம்.



