தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கினாலும், தினமும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது குறிப்பாக வயதானவர்களின் உடல்நலனில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
குழந்தைப் பருவத்தில் பரவலாக பருகப்படும் ஆப்பிள் ஜூஸ், இன்று பெரியவர்களிடையே ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பருக வேண்டிய ஒரு பானமாக மாறியுள்ளது. ஆப்பிள் ஜூஸ் நீரேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும் அதிசய பானம் என்றாலும், அதில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மற்றும் குறைந்த நார்ச்சத்து ஆரோக்கியம் குறித்த சில கேள்விகளை எழுப்புகின்றன. இந்த பதிவில் ஆப்பிள் ஜூஸின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை பார்ப்போம்.
ஆப்பிள் ஜூஸ் பெரும்பாலும் இனிப்பான பானங்களுக்கான ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படும் நிலையில், அதன் முழுமையான நன்மை, தீமைகளைப் புரிந்துகொள்வது அவசியம். இது நீரேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும் சக்தி கொண்டிருந்தாலும், இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளதுடன், நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு காரணமாகக்கூடும்.
ஆப்பிள் பழத்தை சாப்பிடுவது உங்களை வழக்கமான விஷயமான இருக்கலாம். ஆனால், ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸை வழக்கமாக எடுத்துக் கொள்வதன் பின்னணி சிக்கலானது. இயற்கையான இனிப்பு மற்றும் மென்மையான சுவையைக் கொண்ட ஆரோக்கிய பானம் என்பதால் பலரும் இதை தேர்வு செய்கிறார்கள். ஆனால் உண்மையில், இது முழு பழத்தை சாப்பிடுவதற்கு இணையானதா? என்பதே தற்போதைய கேள்வி.
நீரேற்றம்: ஆப்பிள் ஜூஸ் 88% தண்ணீரைக் கொண்டுள்ளதால், இது ஒரு சிறந்த நீரேற்ற பழமாக விளங்குகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் தசை செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. எனவே தான், குழந்தைகளுக்கு லேசான நீர்ப்போக்கு ஏற்பட்டால், நீர்த்த ஆப்பிள் சாறு பரிந்துரைக்கப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள்: ஆப்பிள் ஜூஸில் உள்ள பாலிபினால்கள் (முக்கியமாக க்வெர்செடின், கேட்டசின், குளோரோஜெனிக் அமிலம்) ஆகியவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க, வீக்கத்தை கட்டுப்படுத்த, மற்றும் இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்த உதவக்கூடும். குறிப்பாக, வடிகட்டாத சாறு அதிக ஊட்டச்சத்துக்களை தக்க வைத்திருக்கிறது.
இதய ஆரோக்கியம்: பொதுவாக, ஆப்பிள் சாறு HDL (நல்ல கொழுப்பு) அளவை உயர்த்தவும், LDL (கெட்ட கொழுப்பு) அளவை குறைக்கவும் உதவக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செரிமானத்திற்கு உதவுதல்: நோயிலிருந்து மீளும் போது, நீர்த்த ஆப்பிள் சாறு மென்மையானதாக இருப்பதால், கிளியர் லிக்விட் டயட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படலாம்.
அறிவாற்றல் ஆதரவு: ஆப்பிள் ஜூஸ் நினைவாற்றலுக்கு அவசியமான அசிடைல்கொலின் நிலையை பராமரிக்க உதவக்கூடியதாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது அல்சைமர் நோய்க்கும் எதிராக செயல்படலாம்.
சர்க்கரை அதிகம்: 240 மி.லி ஆப்பிள் ஜூஸில் சுமார் 24-28 கிராம் சர்க்கரை இருக்கக்கூடும். இது ஒரு கேன் சோடாவுக்கு நிகரானது. எனவே, இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.
சரியான தேர்வு: 100% சாறு எடுக்கும் பட்சத்தில், சர்க்கரை இல்லாத ஜூஸை தேர்ந்தெடுக்கவும்.
நார்ச்சத்து மிகக் குறைவு: ஒரு முழு ஆப்பிளில் 4 கிராம் அளவில் நார்ச்சத்து இருக்க, அதன் சாற்றில் 0.5 கிராமுக்கும் குறைவாகவே நார்ச்சத்து இருக்கும். இது திருப்தியை குறைத்து, அதிக அளவில் குடிக்க வைக்கும்.
பல் சுகாதாரப் பிரச்சினை: இனிப்பு மற்றும் அமிலத்தன்மையால் பற்களின் மேலடுக்கு பாதிக்கப்படும். குறிப்பாக, குழந்தைகள் நாள் முழுவதும் பருகினால் பற்களில் குழி அபாயம் அதிகரிக்கும்.
பாக்கெட் ஜூஸ் – கன உலோக மாசுபாடு: சில பேக் செய்யப்பட்ட ஜூஸ் பாக்கெட்டுகளில், ஆர்சனிக், ஈயம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் தான் பாக்கெட் ஜூஸை தேர்வு செய்யும் போது நம்பகமான பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்வது முக்கியம்.
பழமாக சாப்பிடுவதற்கே முதன்மை: நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டிருப்பதால் இதனை ஜூஸாக பருகாமல், முழு பழமாக சாப்பிடுவது சிறந்தது.
மிதமான அளவு: குழந்தைகளுக்கு 4 முதல் 6 அவுன்ஸ், பெரியவர்களுக்கு 8 முதல் 10 அவுன்ஸ் வரையில் போதுமானது.
சொட்டுச் சொட்டாக குடிக்க வேண்டாம்: ஆப்பிள் ஜூஸ் குடிப்பவர்கள், அதனை ரசித்து ருசித்து குடிப்பதற்காக ஒரு ஒரு மடக்காக குடிப்பதால் பற்களில் சர்க்கரைத் தாக்கம் நீடிக்கக்கூடும், எனவே, அதனை தவிர்ப்பது நல்லது.
பெரும்பாலும், அவ்வப்போது தயார் செய்யப்பட்ட ஜூஸையே குடிப்பது சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் பாதுகாப்பு முக்கியம் என்பதால், பதப்படுத்தப்பட்ட சாற்றைத் தேர்வு செய்யலாம். ஏனெனில், பதப்படுத்தப்படாத ஜூஸில் ஈகோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
மைக்ரோஃபில்டர்டு ஜூஸ்களை தவிர்க்கவும்: ஊட்டச்சத்தைக் கருத்தில் கொண்டு, மைக்ரோஃபில்டர்களால் வடிகட்டப்படாத ஆப்பிள் ஜஸ்களைத் தேர்வு செய்யுங்கள்.