பிப்ரவரி 12 அன்று, இந்தியா முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் வேலைநிறுத்தம் (பாரத் பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அன்றாட சேவைகள் பல மாநிலங்களில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கலாம்
நாடு தழுவிய இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 30 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 10 மத்திய தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் கூட்டு அமைப்பு,
இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என உறுதிப்படுத்தியுள்ளது.
ஏன் இந்த வேலைநிறுத்தம்?
தொழிற்சங்கத் தலைவர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த போராட்டம், மத்திய அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டக் குறியீடுகள் (Four Labour Codes), தொழிலாளர்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்துகின்றன என்றும், வேலை உறுதித் தன்மையை குறைக்கின்றன என்றும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த புதிய சட்டங்கள் மூலம், நிறுவனங்களுக்கு வேலைக்கு எடுப்பதும், வேலைநீக்கம் செய்வதும் எளிதாகிவிடும், அதே நேரத்தில், முன்பு தொழிலாளர்களை பாதுகாத்த பல பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படுகின்றன என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாய அமைப்புகளின் ஆதரவு
இந்த வேலைநிறுத்தத்திற்கு விவசாய அமைப்புகளும் ஆதரவு அளிக்கின்றன.
இதனால், போராட்டத்தின் அளவு மேலும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளில் இடையூறு ஏற்படக்கூடிய நிலை உள்ளதால்,
பல பகுதிகளில் பொது சேவைகள் பாதிக்கப்படலாம் என்று நிர்வாகம் எச்சரிக்கையாக உள்ளது.
இந்த பாரத் பந்த் போராட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தொழிற்சங்கங்கள்:
CITU, AITUC, INTUC, HMS, AICCTU, LPF, UTUC
மூடப்பட வாய்ப்புள்ள சேவைகள்
பாரத் பந்த் காரணமாக, பின்வரும் சேவைகள் பல இடங்களில் மூடப்படலாம் அல்லது பாதிக்கப்படலாம்:
முக்கிய நகரங்களில் சந்தைகள் மற்றும் கடைகள்
சில பகுதிகளில் பொதுத்துறை வங்கிகள்
அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் அரசு அலுவலகங்கள்
சாலை மறியல் காரணமாக பொதுப் போக்குவரத்து
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
அதே நேரத்தில், பின்வரும் சேவைகள் இயங்கும் வாய்ப்பு உள்ளது:
மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள்
தனியார் அலுவலகங்கள்
விமான நிலையங்கள்
ஏடிஎம் மையங்கள்
பிற அத்தியாவசிய சேவைகள்
மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை
நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த பாரத் பந்த் காரணமாக, பல பகுதிகளில் பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்படலாம். எனவே, மக்கள் தங்கள் உள்ளூர் பகுதிகளின் நிலவரத்தை முன்கூட்டியே அறிந்து, பயணத் திட்டங்களை அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், முக்கியமான வங்கி மற்றும் அரசு தொடர்பான பணிகளை முன்கூட்டியே முடித்து விடுங்கள். என அதிகாரிகளும் வங்கிகளும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த பாரத் பந்த் தொடர்பான நிலவரங்கள்,
மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடக்கூடும் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



