பாகிஸ்தானின் பலூசிஸ்தான் (Balochistan) பகுதியில் சீனா தனது இராணுவத்தை விரைவில் நிலைநிறுத்தக்கூடும் என பாலூச் தலைவரான மிர் யார் பலூச் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கு அவர் ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த கடிதத்தில், சீனா – பாகிஸ்தான் கூட்டணி பலூசிஸ்தான் மக்களுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று மிர் யார் பாலூச் குறிப்பிட்டுள்ளார்.
பலூசிஸ்தான் கடந்த 79 ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் அடக்குமுறைகள், அரசால் ஆதரிக்கப்படும் தீவிரவாதம், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை சந்தித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் “பலூசிஸ்தான் மக்கள் 79 ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசின் ஆக்கிரமிப்பு, அரச ஆதரவு கொண்ட பயங்கரவாதம் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நீண்டகால பிரச்சினைக்கு இப்போது தீர்வு காண வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
CPEC குறித்து கடும் கவலை
மிர் யார் பலூச் தனது கடிதத்தில் குறிப்பாக சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) குறித்த கவலைகளை முன்வைத்துள்ளார். இந்தத் திட்டம் சீன அதிபர் சீ ஜின்பிங்கின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் முக்கியப் பகுதியாக பலூசிஸ்தான் வழியாக செல்கிறது.
இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும், இதன் மூலம் சீனா விரைவில் பாலூசிஸ்தானில் தனது இராணுவத்தை நிலைநிறுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் “பலூசிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரப் போராட்ட படைகள் வலுப்படுத்தப்படாவிட்டால், இதுவரை நடந்ததைப் போலவே அவர்களை புறக்கணித்தால், சீனா சில மாதங்களுக்குள் பாலூசிஸ்தானில் தனது படைகளை நிறுத்துவது சாத்தியமாகும்,” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் இது ஆபத்தானது
பலூசிஸ்தான் மக்களின் சம்மதமின்றி சீன படைகள் அங்கு காலடி வைத்தால், அது
பாலூசிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் (Bharat) மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.
“60 மில்லியன் பாலூச் மக்களின் விருப்பத்துக்கு எதிராக பாலூசிஸ்தானில் சீன படைகள் நிறுத்தப்பட்டால், அது பலூசிஸ்தானின் மட்டுமல்ல, பாரத் (இந்தியா) நாட்டின் எதிர்காலத்திற்கும் கணிக்க முடியாத பேராபத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.
சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) திட்டத்திற்கு எந்த இராணுவ நோக்கும் இல்லை, அது முழுமையாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமே என்று சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து மறுத்து வருகின்றன. ஆனால் இந்த திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு-காஷ்மீர் வழியாக செல்கிறது என்பதால், இந்தியாவின் இறையாண்மையை மீறுகிறது என்று கூறி இந்தியா ஆரம்பம் முதலே CPEC-க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பிறகு, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மிர் யார் பலூச் பாராட்டியுள்ளார். அந்த தாக்குதல்களை அவர், “பிராந்திய பாதுகாப்புக்கும் நீதிக்கும் இந்தியா காட்டிய அபாரமான துணிச்சலும் உறுதியான அர்ப்பணிப்பும்” என புகழ்ந்துள்ளார். இந்த கடிதம் சீனா–பாகிஸ்தான் கூட்டணியின் விரிவடையும் பாதிப்பு குறித்து பிராந்திய அரசியலில் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
Read More : இந்த நாட்டில் பீர், தண்ணீரை விட மலிவாக கிடைக்கும்! என்ன காரணம்? பலருக்கும் தெரியாத தகவல்..!



