தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன், சர்க்கரை, மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாதந்தோறும் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் இந்த மாதமே வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி முடிந்த பிறகு நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அக்டோபர் 21 இன்று முதல் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் விரைந்து சென்று அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இப்போதே பெற்றுக் கொள்ளுங்கள்.
வடகிழக்கு பருவமழையின் போது சென்னை உள்பட மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான பணிகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் அடுத்த மாதத்துக்கான ரேஷன் அரிசியை இந்த மாதமே பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



