மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ பிஎல் 2025 ஜெர்சிகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 40 வயதுடைய பாதுகாப்புக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட காவலர் ஃபரூக் அஸ்லம் கான், 261 ஜெர்சிகளைத் திருடிச் சென்றதாகவும், ஒவ்வொன்றும் சுமார் 2500 ரூபாய் மதிப்புடையது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான ஃபரூக், பணத்திற்காக ஜெர்சிகளை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். ஜெர்சிகள் வெவ்வேறு அணிகளுக்குச் சொந்தமானவை என்றாலும், அந்த கிட்கள் வீரர்களுக்கானதா அல்லது பொதுமக்களுக்கானதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. காவலர் ஜெர்சிகளை ஹரியானாவைச் சேர்ந்த ஒரு ஆன்லைன் டீலருக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஸ்டோர் ரூமில் இருந்து சரக்குகள் காணாமல் போனது குறித்து நடத்தப்பட்ட சோதனையின்போது, ஜூன் 13 ஆம் தேதி ஜெர்சிகள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, பிசிசிஐ அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காவலர் ஜெர்சிகளை ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டு வெளியேறியது தெரியவந்தது. மேலும், “ஆன்லைன் டீலருடன் பேரம் பேசியதாக காவலர் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பதை அவர் இன்னும் குறிப்பிடவில்லை என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட 261 ஜெர்சிகளில் 50 மீட்கப்பட்டுள்ளன. ஆன்லைன் டீலரிடமிருந்து பணம் நேரடியாக தனது பின் கணக்கில் வந்ததாக காவலர் கூறினார். ஆன்லைன் சூதாட்டத்தில் தான் எல்லா பணத்தையும் இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். அவரது கூற்றை சரிபார்க்க அவரது வங்கிக் கணக்கு விவரங்களை அவர்கள் சரிபார்த்து வருவதாகவும் கூறினார். இந்தத் திருட்டு குறித்து பிசிசிஐ ஜூலை 17 அன்று மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது குறிப்பிடதக்கது.