பீகார் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதை அடுத்து பீகார் முழுவதும் 824 பறக்கும் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2025 நவம்பர் 03 அன்று, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பல்வேறு அமலாக்க முகமைகள் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் ரூ.9.62 கோடி ரொக்கம், ரூ.42.14 கோடி (9.6 லட்சம் லிட்டர்) மதிப்புள்ள மதுபானம், ரூ.24.61 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.5.8 கோடி மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.26 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிற இலவசப் பொருட்கள் உட்பட சுமார் ரூ.108.19 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல்களின் போது பணம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் பல சட்டவிரோத பரிமாற்றத்தை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அமலாக்க அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான சோதனை மற்றும் ஆய்வின் போது சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.
இசிஐநெட் தளத்தில் உள்ள சி-விஜில் செயலியைப் பயன்படுத்தி குடிமக்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்களைப் பதிவுசெய்யலாம். 1950 என்ற உதவி எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.



