சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவைக் கலைக்குமாறு வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் சிறுமி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், ராய்ப்பூரில் உள்ள அபன்பூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சதாம் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணி என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சதாமும் அந்தச் சிறுமியும் கடந்த செப்.28ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். அப்போது, சதாம் சிறுமியிடம் கருவைக் கலைக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சதாம் அந்தச் சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முடிந்து இருவரும் தூங்கச் சென்ற நிலையில், ஆத்திரம் அடைந்த அந்த சிறுமி, சதாம் மிரட்ட பயன்படுத்திய அதே கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, அச்சிறுமி சதாமின் செல்போனை எடுத்துக் கொண்டு, லாட்ஜ் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர், ரயில் நிலையத்திற்கு சென்று லாட்ஜின் சாவியைத் தூக்கி எறிந்துவிட்டுத் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற பிறகு, தனது தாயிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தாயார் தனது மகளை நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தார். காதலன் திருமணம் செய்ய மறுத்ததுடன், கருவைக் கலைக்க வற்புறுத்தியதே இந்த கொலைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : உடல் எடை குறைப்புக்கு மருந்து, மாத்திரைகள்..!! நம்பாதீங்க.. மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி காரணம்..!!