காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் நகை திருட்டு வழக்கில், காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த இளைஞர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுதொடர்பாக 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்களும், குடும்பத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர். காவல்துறையின் அராஜகத்தால் நடந்த கொலை என்றும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனையில் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வலிப்பு காரணமாக அஜித்குமார் உயிரிழந்தார் என FIR பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் தொடர்பான வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் 5 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி வெங்கட பிரசாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி விசாரிக்க உள்ளது. சிபிசிஐ போலீசார் விரைவில் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.
Read More : காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை.. தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கணும்.. இபிஎஸ் காட்டம்..