சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி, களாம்பக்கத்தில் உள்ள தனுஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் – விஜயாஸ்ரீ, கடந்த மாதம் 15-ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டு நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் காரில் வந்தவர்கள் களாம்பாக்கம் வீட்டில் இருந்த தனுஷ் தம்பி இந்திரசந்த் என்ற சிறுவனை கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை, கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ இந்த சம்பவத்தில் தலையிட்டு பேசியதாக அவரிடம் விசாரணை நடத்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் திருவள்ளூர், வெள்ளவேடு, நாசரத்பேட்டை இன்ஸ்பெக்டர்கள், பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றனர். இதையடுத்து அக் கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் 3 போலீசார் மட்டும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வீட்டினுள் சென்று அனைத்து அறைகளிலும் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ உள்ளாரா என்று சோதனை செய்தனர். அவர் இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை 2வது நாளாக நேற்றும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கும் ஜெகன் மூர்த்தி அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுதொடர்பாக அவரும் நேரடியாக எங்களிடம் பேசவில்லை. நாங்களும் பேசவில்லை என சிறுவனின் தாயார் வீடியோ மூலம் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார். தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக முறையிட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல்துறை பாதுகாப்பில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் விசாரணை அதிகாரிகள் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.