நாடு முழுவதும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.. ஆனால் நீட் தேர்வு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாக மாறி உள்ளது.. இதனால் நீட் தேர்வு பயத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது..
இந்த சூழலில் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.. ஆனால் இந்த தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து முறைகேடு நடைபெற்றதால் மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.. இதனால் பல லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அந்த வகையில் கோவையை சேர்ந்த அனு கீர்த்தனா என்ற மாணவி இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதி இருந்தார்.. ஆனால் மீண்டும் மறு தேர்வு எழுத வேண்டும் என்பதால், இந்த முறை கேள்வித்தாள் கடினமாக வருமோ அச்சத்தில் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் நீட் தேர்வு காரணமாக மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் மறுதேர்வு காரணமாக ஏற்பட்ட விரக்தியால் கோபிகா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.. கடந்த 2024-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த கோபிகா கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதி இருந்தார்.
ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக ஜூன் 21-ம் தேதி மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நீட் தேர்வால் 2 நாட்களில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது..



