முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்..
2021-ம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார் வைத்திலிங்கம். திமுகவில் இணைவதற்கு ஏதுவாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்..
டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் சாய்ந்த நிலையில், வைத்திலிங்கம் மற்றும் வெல்லமண்டி நடராஜன் போன்ற சீனியர் தலைவர்களின் வெளியேற்றம், ஓபிஎஸ் முகாமை ஏறத்தாழ முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
ஜெயலலிதா அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக வலம் வந்த வைத்திலிங்கத்தின் வருகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுகவின் கோட்டையை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேசமயம், அதிமுகவின் உட்கட்சிப் பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியின் வீழ்ச்சி ஆகியவை திமுகவுக்கு தேர்தல் களத்தில் கூடுதல் சாதகமான சூழலை உருவாக்கி தந்துள்ளது. இந்த திடீர் அரசியல் நகர்வு, அதிமுகவின் தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் அணியின் எஞ்சிய நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



