ராஜஸ்தானில் இன்று இந்திய விமானப்படையின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே இன்று இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ரத்தன்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
விமானம் நடுவானில் சமநிலையற்றதாகத் தோன்றியதாகவும், பின்னர் அருகிலுள்ள வயலில் விழுந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ராஜல்தேசர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. விபத்துக்கான காரணம் மற்றும் இறந்தவரின் அடையாளம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்து நடந்த இடத்தில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனால் விமானத்தில் இருந்த விமானிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விமானி உடன் இருந்த மற்றொருவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர், மேலும் விசாரணை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்கள் காத்திருக்கின்றன.