நீட் தேர்வில் 680 மதிப்பெண் எடுத்த கோயம்புத்தூர் மாணவி அபிஷியாவுக்கு குறைவான பர்சன்டேஜ் வழங்கப்பட்டது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும், நீட் தேர்வு கட்டாயம் என்பதில் மத்திய அரசு தீவிரமான நிலைப்பாடு கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு போராடி வருகிறது.
இந்த நிலையில் 2025-26 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
இதனைத்தொடர்ந்து, இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 22.09 லட்சம் பேர் எழுதி இருந்த நிலையில் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மாணவர்களின் இமெயில் முகவரிக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தாண்டு 12,36,531 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 680 மதிப்பெண் எடுத்த கோயம்புத்தூர் மாணவி அபிஷியா பெயர் டாப் 100 இடங்களை பிடித்தவரிகளின் பட்டியலில் இடம் பெறவில்லை என புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 680 மதிப்பெண்கள் எடுத்த கோயம்புத்தூர் மாணவிக்கு 40 ஆவது ரேங்க் என தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட,டாப் 100 இடங்களை பிடித்தவரிகளின் பட்டியலில் மாணவி அபிஷியா பெயர் இடம் பெறவில்லை.
மேலும் 680 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு 88.296852 பர்சன்டேஜ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 680 மதிப்பெண்கள் எடுத்தால் 99. 985 முதல் 99.997 வரையிலான பர்சன்டேஜ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நீட் தேர்வு முடிவில் மாணவி எடுத்த மதிப்பெண்கள் அதற்காக வழங்கப்பட்ட பர்சன்டேஜ் மற்றும் ஆல் இந்திய தரவரிசை என முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. இது தொடர்பாக மாணவி தேசிய தேர்வு முகமை புகார் தெரிவிக்கும் மையத்தில் மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.