சென்னை வியாசர்பாடி பகுதியினைச் சேர்ந்தவர் பிரியா வயது 17, ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர். தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வந்தவர். இவருக்கு அண்மையில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அங்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு, அதன் பிறகும் உயிரை காப்பாற்ற முடியாமல், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் பிரியா.
மருத்துவரின் தவறான சிகிச்சையினால் பிரியா உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க தனியாக விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ட்வீட் செய்ய்துள்ளார். அவரது குறிப்பில் “அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுக அரசை கண்டித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.