தாய்லாந்து எல்லையில் உள்ள கம்போடியாவில் சூதாட்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் விடுதியின் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர். நள்ளிரவில் பிடித்த தீ அதிகாலை வரை எரிந்துகொண்டிருந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.