ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகளை தீயணைப்புத்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், பல நோயாளிகள் விபத்தில் சிக்கி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என தெரிகிறது.
இந்நிலையில், தீவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் இரங்கல் தெரிவித்துள்ளார். ”இந்த ஆழ்ந்த இழப்பைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் குடும்பத்தினருக்கு ஆற்றலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இந்த விவகாரம் முழுவதையும் கண்காணிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.