ரயில் பயணத்தின் போது ஒருவேளை விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்படும் பயணிக்கு ரூ.10 லட்சம் அரசின் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்…
விமானத்தில் நாம் பயண டிக்கெட் எடுக்கும் போது, டிக்கெட் சார்ஜ், வரி உள்ளிட்டவைகளோடு டிராவல் இன்சூரன்ஸ் என்ற கட்டணமும் வசூலிக்கப் படுகிறது. அதுபோல் இந்திய ரயில்வே துறையிலும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, ரயில்வே டிராவல் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய ரயில்வே துறை தனது பயணிகள் பாதுகாப்புக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வரை அளிக்கிறது. இந்த வசதி ஒவ்வொரு பயணிக்கும் அளிக்கப்படுகிறது, ஆனால் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததால், மிகச் சிலரே ரயில்வேயின் இந்தச் சிறப்பு வசதியைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த வசதியை பயன்படுத்த ஒரு பயணி என்ன செய்ய வேண்டும்: பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, இணையதளத்தில் தோன்றும் ரயில்வே பயணக் காப்பீட்டுக்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். காப்பீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்களின் ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும். இந்த இணைப்புக்குச் சென்று இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான நாமினி விவரங்களை நிரப்பி சமர்பிக்க வேண்டும்
எவ்வளவு காப்பீட்டு தொகை கிடைக்கும்?: விபத்தில் பயணிகள் இறந்தாலும் ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. இறந்தவரின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல கூடுதலாக 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ரயில் விபத்தால் நிரந்தரமாக ஊனமுற்றால் ரயில் பயணிக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும் விபத்தால் பயணிக்கு பகுதி ஊனமுற்றால் ரூ.7.5 லட்சம் வழங்கப்படுகிறது. காயம் மட்டும் ஏற்பட்டால், மருத்துவமனை செலவுகளுக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.
எப்படி இன்சுரன்ஸ் கிளைம் செய்வது?: காப்பீடு செய்தவர், நாமினியாகப் பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது அவரது வாரிசுகள் காப்பீட்டை கிளைம் செய்யலாம் ரயில் விபத்து நடந்த 4 மாதங்களுக்குள் காப்பீடு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது கேட்கப்படக் கூடிய சரியான ஆவணங்களையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.