தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நெல்லை டிஐஜியாக இருந்த டாக்டர். பா. மூர்த்தி, ஐபிஎஸ் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த அபினவ் குமார் ஐபிஎஸ், மதுரை மண்டல டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலியாக இருந்த சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு -1, துணை ஆணையராக, சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக இருந்துவந்த ஆர் சக்திவேல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், சென்னை காவல்துறையின் நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக டாக்டர். வி. பாஸ்கரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தோஷி ஹதிமானி ஐபிஎஸ் நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பு வகிப்பார் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஏ. சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னையின் சிபி-சிஐடி காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக ஜி. ஜவகர் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக வி. கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் போக்குவரத்துத் துறை துணை ஆணையராக எஸ் மேகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் ஓய்வுபெற்ற காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.