அமெரிக்காவைச் சார்ந்த இந்திய வம்சாவளி பெண் தனது மகனை பட்டினிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் அழுகிய சடலத்தை மீட்ட காவல்துறையினர் அவனது தாயை கொலை குற்றத்தின் பெயரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மோரிஸ்வில்லே பகுதியின் வசித்து வரும் 33 வயதான பிரியங்கா திவாரி என்ற பெண் அவசர உதவி கட்டுப்பாட்டகத்தை தொடர்பு கொண்டு தனது மகன் மூச்சுப் பேச்சில்லாமல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழு சிறுவன் இறந்து சில நாட்களானதை உறுதி செய்தது. மேலும் சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருப்பதையும் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் காவல்துறையை தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் தாய் பிரியங்கா திவாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல நாட்களாக உணவு கொடுக்காமல் தனது மகனைப் பட்டினிப் போட்டு கொலை செய்திருக்கிறார் பிரியங்கா திவாரி. இதன் காரணமாக 10 வயது சிறுவன் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த மரணம் தொடர்பான விவரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தெரியவரும் என காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுவனின் தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.