28 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ’மாண்டஸ்’ புயல் உருவாகி வரலாறு காணாத மழையால் கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நெல் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர். மேற்கொண்டு அவர்களுக்கு பயிர்க்கு இணையான நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

அந்த வகையில், வரலாறு காணாத மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 32,533.4630 ஹெக்டேர் அளவில் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து அதற்குரிய நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் தலா ரூ.10,000 என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.43,92,01,750 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களிலும் பயிர் சேதம் அடைந்துள்ளதால், அங்கு பாதிக்கப்பட்ட 8,562 விவசாயிகளுக்கும் இடுபொருள் நிவாரணமாக மொத்தம் ரூ.6,96,82,473 தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம் அடைந்தது குறித்து ஆவணங்கள் திரட்டப்படும் நிலையில் மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்.