சென்னையில் கொலை சம்பவங்களும், விபத்து மரணங்களும் கடந்த ஆண்டைவிட 20% குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தின் படி நாட்டில் உள்ள 55 மெட்ரோ நகரங்களில் சென்னையில் தான் அதிக வாகன விபத்துகள் நடப்பதாக தெரியவந்தது. இது குறித்த கேள்விக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ”சென்னையில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடக்கும் 104 இடங்கள் பிளாக் ஸ்பாட் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் ஆய்வு செய்து தீர்வு காண சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் ஐஐடி வல்லுநர்கள், நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி பொறியாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுக்கும் ஆய்வறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் கடந்த ஆண்டை விட வாகன விபத்துகளில் ஏற்படும் மரணம் 20 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் ரவுடி கொலை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, கொலை நடக்காத நகரங்கள் உலகிலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை. சென்னையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கிறது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.