10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 4ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.