ஜூன் மாதத்துக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.61 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.7 சதவீதம் வரை அதிகளவில் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நாடு முழுவதும் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. பல வரி விதிப்பு முறைகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது.
துவக்கத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது 6வது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. ஜிஎஸ்டியில் மொத்தம் 4 வகையான வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி வருவாய் குறித்து மாதந்தோறும் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஜூன் மாதத்துக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் என்பது ரூ.1,61,497 கோடியாக அமைந்துள்ளது.
இதில் சிஜிஎஸ்டி என்பது ரூ.31,013 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.38,292 கோடியாகவும், ஐஜிஎஸ்டி என்பது ரூ.80.292 கோடியாகவும் உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் என்பது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது 11.7 சதவீதம் அதிகமாகும். ஆனால் ஜூன் மாத வசூலை கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிட்டு பார்த்தால் அது குறைவாக இருக்கிறது. ஏனென்றால் ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் என்பது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது. இது தான் தற்போது வரை உச்சமாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.