3,316 மையங்களில் 12-ம் வகுப்பு தேர்வு தொடங்கிய முதல் நாளில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மார்ச் 25-ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். இதில் 7,518 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 02,568 மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 கைதிகளும் அடங்குவர். முதல் நாளான மொழி தேர்வில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
மாநிலம் முழுவதும் தேர்வுப் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்காக 4,470 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்வு மையங்களில் சோதனை மேற்கொண்டனர். இதுதவிர, மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, வட்டாரக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.