சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள மதுரையங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னதாயி. இவர் கடந்த 27ம் தேதி காலையில் வீட்டில் தலையில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ் 1 மாணவன்தான் மூதாட்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அச்சிறுவன், ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளிக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டும், செல்போனில் விளையாடிக் கொண்டும் இருந்துள்ளான். இவர் ஊர் சுற்றிவந்ததை அறிந்த பாட்டி, பள்ளிக்கூடம் போய் படிக்க மாட்டாயா? என கேட்டு, அவ்வழியாக சென்ற அச்சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் மூதாட்டி சின்னதாயி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். வீட்டின் முன்பு பாட்டி கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து சென்ற அச்சிறுவன், மூதாட்டியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். மகன் கொலை செய்து விட்டான் என்பதை அறிந்த தாய் கிருஷ்ணபிரியா, மகனை அழைத்துக் கொண்டு காரைக்காலில் உள்ள தம்பி வீட்டிற்கு அழைத்து சென்று மறைத்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலை வழக்கில் சிறுவனையும், கொலையை மறைத்ததாக தாய் கிருஷ்ணபிரியாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தாயை சேலம் பெண்கள் சிறையில் அடைத்த நிலையில், மகனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இதற்கிடையில் மூதாட்டியை கொலை செய்வதற்கு காரணம், தன்னை படிக்குமாறு கூறியதால் தான் கோபத்தில் வெட்டி கொன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டியை 11ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more : கருச்சிதைவுக்குப் பிறகு பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு.. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!