ஆந்திராவில் அனகாபல்லி மாவட்டத்தில் நேற்று இரவு விஷ வாயு தாக்கியதால் 121 பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிராண்டிக்ஸ் செஸ்சில் இருக்கும் விதை நிறுவனத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுவனம் மூடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பெறும் அனகாப்பள்ளி, என்டிஆர் பகுதி மருத்துவமனைக்கு தொழில்துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் இன்று சென்று பார்த்தார்.
டிஎம்எச்ஓ ஹேமந்த் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரவன்குமார் ஆகியோரிடம் ஊழியர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விதை நிறுவனத்தில் நேற்று மாலை 6.45 மணி முதல் 7.30 மணி வரை 121 பெண் தொழிலாளிகளுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் இதே ஆலையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததுள்ளது. மீண்டும் அதே போன்ற அறிகுறிகள் தொழிலாளிகள் மத்தியில் நடந்ததால் அவர்கள் உடனடியாக அனகப்பள்ளியில் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் டாக்டர்கள் தற்போது அனுமதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளிகளும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கிடையில், இது போன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை தீவிரமாகக் கவனித்த அவர், உண்மைகள் கண்டறியப்படும் வரை ஆலையை மூட உத்தரவிட்டார். இந்த சம்பவத்திற்கு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.