மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், ஜலதோஷம், சர்க்கரை நோய், கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள்(CDSCO) முறையாக ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வின் போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 1,000-க்கும் அதிகமான மருந்து மாதிரிகள் பரிசோதிக்கபட்டன. அதில், வைட்டமின் குறைபாடு, சர்க்கரை நோய், கிருமித் தொற்று, ஜீரண பிரச்சினைகள், ஜலதோஷம், சிறுநீர் பாதை தொற்று, கண் தொற்று, நியாசின் குறைபாடு, பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணி தொற்றுகள், வலி, வீக்கம் மற்றும் பிற நோய்கள் போன்ற பல பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றதாக இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டியலில் புண் எதிர்ப்பு மருந்தான ரபேப்ரஸோல் சோடியம் போன்ற பல ஊசிகளில் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் நிமோனியா, சிறுநீர் பாதை தொற்றுகள் மற்றும் எலும்புகள் மற்றும் தோலில் ஏற்படும் தொற்றுகள் போன்ற பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சிப்ரோஃப்ளோக்சசின் ஊசி மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் செஃப்ட்ரியாக்சோன் ஊசி ஆகியவையும் பட்டியலில் இருந்தன.
மேலும் 145 தரமற்ற மருந்துகளில், அசெக்ளோஃபெனாக், பாராசிட்டமால் மற்றும் செராட்டியோபெப்டிடாஸ் மாத்திரைகள், செஃபிக்சைம் மற்றும் ஆஃப்லோக்சசின் மாத்திரைகள், ஓக்யூக்ஸ் கண் மருந்து சொட்டுகள், நியூட்ரிபெஸ்ட்-பிளஸ், ஆஃப்லோக்சசின் மற்றும் ஆர்னிடசோல் மாத்திரைகள், ரீபாஸ்ட்-ஏஆர்டி, சோலிகாஸ்ட்-எல், ஹையோசின் பியூட்டில்ப்ரோமைடு மாத்திரைகள், வின்கோல்ட் இசட், மெகாசெக்லோ எம்ஆர் மற்றும் ரிஸ்டாக்ஸ்-200 மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.
இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் போன்ற வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. அதன் விவரங்களை cdsco.gov.in இணையதளத்தில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் இந்த தகவல்களை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியுள்ளது.