fbpx

வாட்டி வதைக்கும் கோடை வெயில்… குடிநீருக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு!

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது.  மேலும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர், “தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சினை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

Next Post

பரபரப்பு! ஹெலிகாப்டரில் கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி..

Sat Apr 27 , 2024
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டரில் கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் அமரும்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்த அவரை உடனடியே தூக்கி விட்டார். இருப்பினும், மம்தாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் கோல்கட்டாவின் காளிகாட் பகுதியில் உள்ள தன் […]

You May Like