ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த நாளில் மாணவர்கள் புது ஆடை அணிந்து விழா எடுத்து காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஓவியம், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.