பள்ளி ஆசிரியர் ஒருவர், அங்கு படிக்கும் 16 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, புகார் பெட்டி மூலம் அம்பலமானது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே கருளாயி பகுதியில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்காக சமீபத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த புகார் பெட்டியை வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் திறந்து மாணவர்களின் குறைகளை தீர்த்து வைப்பார்கள்.
அந்தவகையில், நேற்று முன்தினம் வழக்கம்போல பெட்டியை திறந்து உள்ளே இருந்த புகாரை படித்து பார்த்தபோது ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பள்ளியில் பணிபுரியும் முகம்மது நவ்ஷார் என்ற ஆசிரியர் மீது 16 மாணவிகள் பாலியல் புகார் எழுதி பெட்டியில் போட்டிருந்தனர். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக போலீசுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், புகார் எழுதிய ஒரு மாணவியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த மாதம் 20ஆம் தேதி ஆசிரியர் முகம்மது நவ்ஷார், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த மாணவி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, ஆசிரியர் நவ்ஷார் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தை அறிந்த ஆசிரியர் நவ்ஷார் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.