16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திரிபுரா மாநிலம் உனோகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண், தனது மகளை கடந்த 19ஆம் தேதி உனோகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மாணிக் சாஹாவிடம் உரிய விளக்கம் கேட்போம் என காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிஷ் சாஹா தெரிவித்துள்ளார்.